Devi Geethai 1.11-1.16
இவ்வாறாக இந்த மாயை வேதாதிகளில் நானாவிதமான பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த மாயை கண்ணால் காணப்படுபவற்றில் ஜடத்வமாக சொல்லப்படுகிறது. அதுவே அஞ்ஞான எண்ணங்களின் 'அசத்' எனப்படுகிறது.
__________
(சைதன்ய சம்பந்தத்தால் இம்மாயையையும் சைதன்யம் என்று சொல்லலாமா?) சைதன்யத்திற்கு காணப்படும் தன்மை இல்லை. மாயை காணப்படுவதால் அது ஜடமே ஆகும். சைதன்யம் சுயமாக ப்ரகாசிப்பதாகும். மற்றொன்றால் ப்ரகாசிக்கப்படுவது அன்று.
_________
சைதன்யம் மற்றொன்றால் ப்ரகாசிக்கப்படுகிறது என்று எடுத்துக் கொண்டால், அதற்கு நிலையற்ற தன்மை என்ற தோஷம் வந்து விடும். செய்பவனும், செய்யப்படும் காரியமும் ஒரே பொருளாய் இருக்க முடியாது. அதனால் சைதன்யம் மற்றொன்றால் ப்ரகாசிக்கப் படுவதல்ல. சைதன்யம் தீபம் போல தன்னையே சுயமாக ப்ரகாசித்துக் கொள்ளக் கூடியது.
__________
சைதன்யமானது தீபம் போல தன்னைத்தான் ப்ரகாசித்துக் கொண்டு, தன்னிலிருந்து வேறான எல்லா பொருளையும் ப்ரகாசிக்கச் செய்கிறது என்று அறிந்து கொள், பர்வதா! அதனால் இந்த என்னுடைய ஞான சொரூபமானது என்றும் அழியா நிலையும், நித்யத்வமும் கொண்டது.
________
காணப்படும் பொருளுக்கு, ஜாக்ரத-ஸ்வப்பன-ஸுஷுப்தி முதலிய நிலை மாற்றங்கள் உண்டு. ஸம்வித் ஆன சைதன்யம், எப்போதுமே மாற்றங்களை அனுபவிப்பதில்லை.
________
ஒருவேளை சைதன்யத்திற்கும் அம்மூன்று அவஸ்தைகளின் அனுபவம் உண்டெனின், இதற்கு வேறாக, இதை அனுபவிக்கச் செய்யகூடிய ஒரு சாக்ஷி இருக்க வேண்டுமன்றோ? இந்த ஸம்வித் ஸ்வரூபம் ஸ்வயம்-ப்ரகாசமானது, வேறொன்றால் ப்ரகாசிப்பதன்று என முன்னமே கூறப்பட்டபடியால், இதற்கு வேறொரு சாக்ஷி எங்ஙனம் இருக்க முடியும்?
_________
Comments
Post a Comment